Thursday 20 June 2013

இவாலியாவுடன் ஓர் இரவு


Nissan-ல் Evalia என்ற புது SUV-யை commercial vehicle category-யாக முன்னிலைப் படுத்தும் அறிமுகம் ஜூன்'19 அன்று சென்னை தாஜ் கொரமன்டலில் நடந்தது.  Innova-வை விட சிறந்த வண்டின்னு சொன்னதாலும், Nissan-லிருந்து என்ன்ன்னையும்... மதித்து அழைப்பிதழ் அனுப்பியிருந்ததாலும் ஜப்பான்காரன் என்னதான் செய்திருப்பான்னு  பாக்கலாம்னு போனா, ஊர்ல இருந்த அத்தனை travels-க்கும் அழைப்பிதழ்கள் போயிருக்கும் போல...  அரங்கம் நிறைந்து காணப் பட்டது.  அதில் இருந்த followed by cocktail dinner-ன்ற வாசகம் தான் நிறைய பேரை அங்கே இழுத்து வந்திருக்க வேண்டும்.

மாலை 7:30க்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்வு தவறாமல் மிகச் சரியாக இரவு 8:20க்கு ஆரம்பித்தது.  சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்ற தமிழனின் தன்னம்பிக்கைக்கு ஏற்ப Nissan-ல் வேலை பார்க்கும் வட இந்திய சேட்டு பசங்க Evalia-வின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்ல ஆரம்பிக்க, நம்ம ஆளுங்க வழக்கம் போல சொல்போனில் பிஸியானார்கள்.  Mileage மற்றும் விலையைத் தவிர Innova-வை விட Evalia ஒன்றும் சிறப்பாகத் தெரியவில்லை.  ரோட்டுக்கு வரட்டும்... பார்க்கலாம்...

Dealer-களை ஓரிரு வார்த்தைகள் பேசச் சொன்னார்கள்.  முதலில் பேச வந்த தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடை பரப்பியிருக்கும் ஒரு பிரபல dealer, "Good evening, எல்லாருக்கும் வணக்கங்க.., என் பேரு Elephant Hill..., basically நான் ***** (தன் சாதி), mortar drink-ஐச்  சேர்ந்த *******(சாதியின் உட்பிரிவு)" என்று பேச ஆரம்பித்தார்.  "இப்போல்லாம் யாருங்க சாதி பாக்குறா" என்று பேசும் அப்பாவிகளை நொந்து கொண்டேன்.  ஒரு metropolitan தலைநகரில், 5ஸ்டார் ஹோட்டலில், corporate meeting-ல், சாதி பேரைச் சொல்லி ஒட்டு பொறுக்கும் அரசியல்வாதிக்கு சற்றும் இளைக்காமல், சாதி பேரைச் சொல்லி வணிகப் பிச்சை கேட்ட  கொடுமையைக் காண நேரிட்டது.  Evalia வாங்குறனோ இல்லியோ, உங்கிட்ட கம்மர்கட் கூட வாங்கக் கூடாது என முடிவு செய்தேன்.

இரவு 9:40க்கு "bar counter-ம் buffet-ம் திறந்தாச்சு, have a nice time" என்றார்கள்.  தற்காலிகமாக நான் மதுவை ஒதுக்கியிருந்ததால் buffet ஏரியாவை நோக்கிச் சென்றேன்.  Bar counter-ஐக் கடந்து செல்லும் போது நான் கண்ட காட்சி... ஆஹா... அற்புதம்...!!  நாளை முதல் தமிழகத்தில் சாராய விற்பனை கிடையாது என்ற அறிவிப்பி
ற்கு முந்தின நாள் இரவு எப்படியிருப்பார்களோ, அப்படி இருந்தார்கள் நம் தமிழ்கூறும் நல்லுலகத்தினர்.  தீபாவளிக்கு முதல் நாள் இரவில் ரங்கநாதன் தெருவில் முட்டி மோதுபவர்கள், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் எக்கி எக்கி டிக்கெட் போடுபவர்கள்,  எழும்பூர்-சென்ட்ரலில் போராடி இடம் பிடிப்பவர்களை விட திறமையுடனும், விழிப்புடனும், நம்பிக்கையுடனும் "சிந்துபைரவி" சிவக்குமாருக்கு சவால் விடும் வகையில் கைகளில் குவளைகளை ஏந்தியபடி, ஒருவரையொருவர் முண்டியடித்தபடி இருந்தனர்.

Buffet ஏரியா காலியாக இருந்தது...  நமக்கு spoon, fork ஒத்து வராது... சரி, கை கழுவி விட்டு வருவோம் என வாஷ் ரூம் சென்று திரும்பி வந்து பார்த்தால் பந்தியில் ஒரு பெரிய படையெடுப்பு நடந்து கொண்டிருந்தது.  வரிசை கிடையாது... எதிரெதிர் திசையில் தட்டை ஏந்திக் கொண்டு வதம் செய்து கொண்டிருந்தனர்.  தட்டைக் கண்டுபிடித்தேன்.  சிக்கன் டிக்கா, மட்டன் வறுவல், மீன் குழம்பு இருந்த பாத்திரங்கள் கும்பலாக கற்பழிக்கப் பட்டுக் கொண்டிருந்தன.  Veg Salad-ம் தயிர் வடையும் மட்டுமே free-யாக இருந்தன.  அவற்றிற்கு நான் ஆதரவு தந்தேன். 

இது போன்ற புதிய automobile அறிமுகங்களின் போது தங்களிடம்  தொடர்ந்து வணிகம் செய்யும் நபர்களுக்கோ, நிறுவனங்களுக்கோ மட்டுமே அழைப்பு விடுக்கப்படும்.  மருந்து கம்பெனிகள் மருத்துவர்களுக்கு அளிக்கும் விருந்துக்கு சற்றும் குறைவில்லாமல் இவ்வகை corporate business meet இருக்கும்.  அழைப்பிதழைக் காட்டினால் மட்டுமே அனுமதிக்கப் படுவர். Toyota Fortuner அறிமுகம் Taj Fishermen's Cove-ல் வைத்து நடத்திய போது ரஷ்ய அழகிகளை, உடையவன் மட்டும் கொண்டாடும் அழகை  தடைகள் போட்டு ஆட விட்டு அழகு சேர்த்தனர். IPL cheer leaders எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்.

தற்போது நடந்த event-ல் யாரிடமும் அழைப்பிதழ் கேட்கப் படவில்லை.  சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது அந்த கூட்டத்திற்கு துளியும் சம்பந்தம் இல்லாத நான்கைந்து பெண்கள் தாங்கள் Pre-KG படிக்கும் போது வாங்கிய உடைகளை போட்டுக் கொண்டு அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்தனர்.  சில நிமிடங்களில் முகத்தில் வளையங்களும் உடம்பில் பச்சையும் குத்தி இருந்த சில இளைஞர்கள் அவர்களுடன் இணைந்து கொண்டனர். அவர்களின் தீர்த்தவாரி தனி ஆவர்த்தனமாக  ஆரம்பிக்க மற்றவர்களுக்கு ஊறுகாய் இல்லாத குறை தீர்ந்தது.

அப்பொழுதான் தான் கவனித்தேன், அதில் இருந்த ஒரு பெண் இதற்கு முன் ஏற்கனவே இது போன்றதொரு நிகழ்வில் தன் குழுவினருடன் தாகசாந்தி செய்து கும்மாளமிட்டது  நினைவிற்கு வந்தது.  உடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த நண்பர் அதிலிருந்த வேறு ஒரு பெண்ணைக் காட்டி அவள் பெயரையும் சொல்லி "நானும் அவளும் இதற்கு முன் ஒன்னா வேலை பார்த்தோம்.  இவளுங்களுக்கு இதே வேலை தான்..., எந்த ஹோட்டல்ல ஓசில cocktail dinner நடந்தாலும் கரெக்டா வந்துருவாளுங்க, இவளுங்க தோரணையைப் பார்த்து எவனும் கேட்கவும் மாட்டான்." என்றார்.  சிறிது நேரத்தில் பத்து பெண்களுக்கு மேல் அந்த கூட்டத்தில் இருந்தனர்.  Boys படத்தில் செந்தில் இரண்டு பாத்திரங்களைக் கொடுத்து "ஒன்னு உனக்கு, இன்னொன்னு எனக்கு" என்று சொல்லுவாரே... அது போல அந்த பசங்கள் அடிச்சு பிடிச்சு வாங்கி கொண்டு வரும் கிளாஸ்களில் ஒன்றை தங்களிடமும் மற்றொன்றை அந்த வளர்ந்த குழந்தைகளிடத்திலும் கொடுத்து அழகு பார்த்தனர்.   

ஒரு ஓரத்தில் தோசை counter கூட்டம் இல்லாமல் இருந்தது. அதை நோக்கி நடந்து சென்றேன்.  எங்கிருந்துதான் வருவானுங்களோ...!!  நான் counter-ஐ அடையும் முன் 20 பேர் அங்கிருந்தனர்.  ஒரு கணம் நாமிருப்பது எதியோப்பியா-சோமாலியாவா அல்லது சென்னையின் மிகப் பெரிய பணக்கார ஹோட்டலா என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. கையைக் கழுவினேன்...

கிளம்பி வெளியே வந்த பொழுது லாபியில் எதிரில் இரு பெண்கள் வந்தனர்.  அவர்களில் ஒருத்தி "what, Nissan huh?, i "m coming..." என்று பேசிக் கொண்டே போனாள்.  அப்போது இரவு மணி 10:30.  புதுப்பேட்டையில் கொக்கி குமார், "உங்களையெல்லாம் வீட்ல தேட மாட்டங்க?" என்று கேட்கும் காட்சி கண்முன் வந்து போனது.  கெட்டாலும் மேல்தட்டு மக்கள் மேன் மக்களே..!!"

வீட்டிற்கு போகும் வழியில் டிரைவரிடம் "உங்களை சாப்பிட சொன்னேனே, சாப்பிட்டீங்கள?" என்று கேட்டேன்.  "இல்ல சார்" என்றார்.  "எங்காவது ரோட்டு கடையில நிறுத்துங்க.. ரெண்டு பேரும் சாப்பிட்டு போலாம்" என்றேன்..!!

Saturday 15 June 2013

உலு(ரு)க்கும் பாடல்கள்: பாகம் - 3


உலு(ரு)க்கும் பாடல்கள் முதல் பாகத்தைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்
உலு(ரு)க்கும் பாடல்கள் 2-ம் பாகத்தைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்
 
80-களில் தமிழ்த் திரையிசையை என்னைப் போன்ற சங்கீத ஞானம் அற்ற சாதாரண ரசிகர்கள் மூன்றாகப் பிரித்துப் பார்ப்பார்கள்.  மெலடி, டப்பாங்குத்து மற்றும் டிஸ்கோ.  ராஜாவின் ராஜ்ஜியம் கோலோச்சிக் கொண்டிருத்த காலம். அவர் வாசித்தார்... ரசிகர்கள் யாசித்தார்கள்...  இளையராஜா இசையமைத்த பல பாடல்களில் ஏதாவது வித்தியாசமாக செய்திருப்பார்.  அதை அவரே எப்போவாது சொன்னால் தான் நமக்கு "ஓ.. இதுல இப்படி ஒன்னு இருக்கோ"ன்னு தோணும். உதாரணமாக "ராகம் ரசமெயே வேதமாய்" என்ற தெலுங்குப் பாடலில் "ச, ரி, க" என்னும் மூன்று ஸ்வரங்களை மட்டுமே உபயோகப் படுத்தியிருப்பார்.  "ராஜா.. ராஜாதி ராஜன் இந்த" பாடல் முழுவதும் ட்ரம்ஸ் மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கும், இரண்டாவது interlude-ல் rhythm. இது போன்று சொல்லிக் கொண்டே போகலாம்.

தமிழ்த் திரை இசையில் கர்னாடிக் சங்கீதம் பெரும்பங்கு வகித்திருந்தாலும் அதை அனைவரும் ரசிக்கும் வகையில் தாலாட்டு, நாட்டுப்புற, கஜல், மேற்கத்திய, இன்னபிற வகையுடன் குழைத்து MSV, இளையராஜா போன்றவர்கள் அளித்து வந்துள்ளனர்.  90களுக்குப் பிறகு ரஹ்மான் வித்தியாசமாக ஆப்ரிக்கன், அரபிக், அல்ஜீரிக் வகை பாணியை இணைத்து பல பாடல்களை ஹிட்டடித்துள்ளார்.  "அரபிக் கடலோரம்", "ஸ்ட்ராபெர்ரி கண்ணே", "முக்காபுலா", "அடியே.. எனை", "காதல் நயகரா" போன்ற பல பாடல்களை சொல்லலாம்.  தமிழ்த் திரையிசையில் hip hop, jazz, blues, pop, country, folk, rhythm & blue, rock, ska போன்ற genre-க்கள் ரஹ்மான் வரவிற்குப் பிறகு அதிகளவில் உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன.

Rock-ல் alternative rock என்றொரு வகை உண்டு.  நம்ப வசதிக்கு இதை slow rock என்றும் வைத்துக்  கொள்ளலாம். ஆங்கிலப் பாடல்களில் என்னை வெகுவாகக் கவர்ந்தது இந்த slow rock genre தான்.  Phil Collins, George Michael, The Eagles, Stevie Wonder, Michael learns to Rock, Richard Marx, Foreigner, Elton John போன்றவர்கள் இந்த slow rock-ல் பட்டையைக் கிளப்பியவர்கள்.

இப்பதிவில் நான் பகிரப் போவது இளையராஜா இசையமைத்த "fast melody duets" பற்றி!! அதென்ன fast melody? எனக்கு இதற்கு சங்கீதப் பூர்வமாக விளக்கம் சொல்லத் தெரியாது... காதல் பாடல்கள் என்றாலே இயக்குனர்  மற்றும் ரசிகர் விருப்பம் மெலடியாகத்தான் இருக்கும். அதிலேயே சற்று tempo-வை ஏற்றி சுறுசுறுவென கொடுத்தால் எப்படியிருக்கும்?!  பாடலின் பல்லவி, அனுபல்லவி, சரணம் அனைத்திலும் ஒரு சறுக்காத வேகம்!!  Interlude-லும் அதே பரபர தேடல்.  அதுதான் fast melody.  சொன்னால் விளங்காது; அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.  உணர்ந்தால் மட்டுமே அனுபவிக்க முடியும்.

இதில் நாயகன் நாயகியை ஸ்லோ மோஷனில் மரத்தைச் சுற்றி ஆடுவதை தவிர்த்து தடதடவென ஓடி ஆட விடலாம்.  துணை நடிகைகள் மகாபலிபுர சிற்பங்களின் உடையில் வந்து மலர் தூவ வேண்டாம். இயக்குனர்கள் "i want more emotion.." என்று தொங்க தேவையில்லை.  தயாரிப்பாளரின் வசதிக்கேற்ப set போட்டும் எடுக்கலாம், outdoor-லும் எடுக்கலாம்.  பாடல்களுக்குள் செல்வோம்...

Fast melody வகைப் பாடல்களை நான் கண்டு கொண்டு, பிரித்து ரசிக்க ஆரம்பித்தது இந்தப் பாடலை கேட்ட பின்பு தான்.  படம்: சத்யா, பாடியவர்கள்: SPB & லதா மங்கேஷ்கர், பாடல்: "வளையோசை கலகலவென"""
புல்லாங்குழலினூடே ஆரவாரமில்லாமல் ஆரம்பிக்கும் இப்பாடல் இறுதி வரை மிதமான அலைகள் மீண்டும் மீண்டும் நம்மிடையே வந்து ஆர்ப்பரிப்பது போல இருக்கும். குறிப்பாக இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் "லா...ல...லா...ல...லா...லா..."!!  லதா மங்கேஷ்கரின் உச்சரிப்பு சரியாக இராது என்றாலும் அமலாவின் குழந்தைத்தனமான சில்மிஷங்களுக்கு சரியாக செட் ஆகும்.  இப்பாடலில் கமல் அமலாவின் உதட்டில் சேலையைப் போர்த்தி முத்தமிடும் காட்சி செம...!!  இன்று வரை பல படங்களில் நாயகன் நாயகி பஸ்ஸில் செல்லுமாறு காட்சி வந்தால் இந்தப் பாடலையே பின்னணியாக பயன்படுத்துகின்றனர்.


இன்று மொட்டைத் தலையுடன் டிவியில் சமையல் செய்து கொண்டிருக்கும் அன்றைய கோடம்பாக்க சாக்லேட் பையன் சுரேஷ், நளினி & சாதனாவுடன் இணைந்து நடித்த(!!) ஒரு த்ரில்லர் "உன்னைத் தேடி வருவேன்".  பாடல்: "என் அன்பே அன்பே என் மனம் உன் வசம்",  பாடியவர்கள்: SPB & S.ஜானகி
வேகமாகச் செல்லும் தெளிந்த நீரோடையில் பயணம் செய்வது போல இப்பாடல் உங்களை அழைத்துச் செல்லும்.  இரண்டு சரணங்களும் முடியும் தருவாயில் "வா... அன்பே அன்பே அன்பே வா...." என்ற இடம் உச்சகட்டம்.


ஜேம்ஸ் பான்ட்  மாதிரியே படம் எடுக்கணும்னு கமல் கையை சுட்டுக் கொண்ட படம் விக்ரம்.  ஜேம்ஸ் பான்ட்  படத்தில் வருவது போல மூன்று கதாநாயகிகள், ஆயுதக் கடத்தல், தேசப்பற்று, வேற்றுமொழி, பழிவாங்கல் போன்ற சமாச்சாரங்கள் இதிலும் இருந்தன.  சுஜாதாவின் கதை-வசனம்.  இருந்தும் படம் ஊத்திக் கொண்டது.   கமல் ரசிகர்கள் வேண்டுமானால் இப்படத்தை கமல் அட்வான்சாக எடுத்ததால் மக்களுக்கு புரியாமல் தோல்வியடைந்தது என்பார்கள்.  ஆனால் இதற்கு முன்பு வந்த "the spy who loved me", "moon raker", "for your eyes only" உள்ளிட்ட ஜேம்ஸ் பான்ட் படங்கள் மொழி புரியாமலே தமிழ்நாட்டில் ஹிட்டடித்தவை.  ஜேம்ஸ் பான்ட் பட பாணியிலேயே எடுக்கப் பட்ட title பாடலான "விக்ரம்...விக்ரம்..." முதன் முதலாக techno mix செய்யப் பட்டு rap style-ல் வந்த பாடல்.  "மீண்டும் மீண்டும் வா" சரியான hot, hotter, hottest!!  நம்ம fast melody "வனிதாமணி வனமோகினி வந்தாடு..."  பாடியவர்கள்: SPB & S.ஜானகி
பாடலின் ஆரம்பத்தில் வரும் "கண்ணே.. ஹ்ம்ம்.. கட்டிக்கவா.."-வை கமலும் அம்பிகாவும் சொந்தக் குரலில் பாடியிருப்பார்கள்.  பாடலில் எக்ஸ்பிரஸ் வேகம் இருக்கும்.  இப்பாடலில் எனக்குப் பிடித்த வரிகள்;
ஆண்: விடிந்தது.. நிறம் என்ன வெளுத்தது..
பெண்: இரவிலே.. மன்னன் வந்து வெளுத்தது..


செல்வி என்று சுரேஷும் ரேவதியும் நடித்த படம்.  காலக் கொடுமையால் சுரேஷும் ரேவதியும் பிரிந்திருக்க அவர்கள் வீட்டு நாய்கள் ஒன்றையொன்று காதல் செய்து சேர்த்து வைக்கும் படம்.  உலக சினிமா வரலாற்றில் முதன் முதலாக இரண்டு நாய்களுக்கு டூயட் வைத்த படம் செல்வி.  பாடல்: "இளமனது பலகனவு விழிகளிலே", பாடியவர்கள்: வழக்கம் போல் SPB & S.ஜானகி
பாடல் முழுவதுமே ஏதோ ரகசியம் பேசுவது போலவே இருவரும் பாடியிருப்பார்கள்.  இசையும் அதற்கேற்றது போலவே உடன் பயணிக்கும். சரணங்களின்  முடிவில் ஒரே வரியை high pitch-லும் பிறகு இன்னொருவர் அதை low pitch-லும் பாடுவது ஒரு வித்தியாசமான அனுபவம்.
"கொடியிடை நாணத்தில் நெளிகிறதோ, கனிகளின் பாரத்தில் வளைகிறதோ"
"விரல் பட்டு இளமொட்டு விரியட்டுமே, வெட்கம் விலகட்டும் விலகட்டுமே"

போன்ற கலக்கலான காதல் வரிகளைக் கொண்ட பாடல்.  ஹ்ம்ம்... நாய்க்கு நிக்க நேரம் இருக்காது!!!


கமல், அம்பிகா நடித்த நானும் ஒரு தொழிலாளி படத்தில் வரும் "பட்டுப் பூவே உன்னைப் பார்த்தால்" பாடலுக்கு அம்பிகா, பாலுமகேந்திரா பட நாயகியின் ஆஸ்தான உடையில் வந்து உசுப்பேத்துவார்.  இப்படத்தில் வரும் "ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும்" பாடல் சரியான fast melody.  பாடியவர்கள் மீண்டும் SPB & S.ஜானகி.  தனிமையும் கூட ஆட ஜோடியும் இருந்தால் இப்பாடலைக் கேட்டு ஆடாமல் இருக்க முடியாது. பாடலின் சரணத்தில் ஜானகி "மாமா...." என்று இழுக்க, SPB, "கண் துடிக்குது பெண் துடிக்குது கை அணைச்சிட வா" என பதில் பாட, மீண்டும் ஜானகி "புது ரோஜா...." என்று இழுப்பார் பாருங்கள்.. சான்சே இல்ல..!!


கங்கை அமரன் இசையில் வந்த ஒரு musical drama சின்ன தம்பி பெரிய தம்பி.  பிரபு, நதியா, சத்யராஜ், சுதச்சந்திரன் என்று பெரிய பட்டாளம்.  "மலரின் நுனியில் பனி விழுந்தது", "எம்பாட்டை கேட்டால் போதும்", "ஜீன்ஸ் கொடுத்த மாமா", போன்ற துள்ளலான பாடல்கள் படம் முழுவதும் விரவிக் கிடக்கும்.  இளையராஜா இசைன்னு சொல்லிட்டு கங்கை அமரன் பாடல்களைப் பற்றி எழுதும் காரணம் என்னன்னா, கங்கை அமரன் இப்படத்தில் இளையராஜா வேறு ஒரு படத்திற்கு போட்டு வைத்து கைவிடப்பட்ட ஒரு tune-ஐ இப்படத்தில் உபயோகப் படுத்தியிருப்பார்.  இதை கங்கை அமரன் சில மாதங்களுக்கு முன்பு ஒரு கச்சேரியின் போது சொன்னார். drop ஆனது ரஜினி படம் என்பது கூடுதல் தகவல். அந்தப் பாடல் "ஒரு காதல் என்பது, உன் நெஞ்சில் உள்ளது..."  பாடலின் ஆரம்பமே அசத்தலாக இருக்கும்.  பல்லவியும் அனுபல்லவியும் நிதானத்துடன் ஆரம்பிப்பது போல இருந்தாலும் முதல் interlude-ல் இருந்து வேகம் பிடிக்கும்.


படம்: காக்கி சட்டை.  இப்படம் மரண ஹிட், "பட்டுக் கன்னம்", "சிங்காரி சரக்கு", "கண்மணியே பேசு", "பூப்போட்ட தாவனி" என படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்.  படத்தின் ஹீரோ கமலா, "தகிடு தகிடு"சத்யராஜா என்றே தெரியாது.  நம்ம பாடல்: "வானிலே தேனிலா ஆடுதே பாடுதே" மீண்டும் கமல் & அம்பிகா.  மீண்டும் SPB & S.ஜானகி.  வித்தியாசனமான ஆரம்பம்.  பாடல் முழுவதும் வரும் இசை echo effect-ல் இருக்கும்.  படத்தின் கதையோடு ஒன்றிப் பார்த்தால் அந்த echo effect ஏன் கொடுக்கப் பட்டது என விளங்கும். இரண்டாவது சரணத்திற்கு முன்பு வரும் "லா...ல லா ல.. ல ல லா..."வை இருவரும் வேறு வேறு tempo-வில் பாடுவது சரியான செவி விருந்தோம்பல்..!!


இப்பதிவில் இடம் பெற்ற பாடல்களில் சிறந்த பாடல் என இதைத் தான் சொல்வேன்.  தினமும் ஒரு முறையாவது இப்பாடலை பார்த்தோ, கேட்டோ விடுவேன்.
"சோழக் குயில் பாடுகையில் சோலைக் குயில் ஓய்வெடுக்கும்
மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும்"
"மஞ்சமே தமிழின் மன்றமே புதிய சந்தமே சிந்தினேன்
அன்பனே இளைய கம்பனே கவிதை நண்பனே நம்பினேன்"

போன்ற "வைரமுத்"தான வரிகள்..
வீட்ல அம்மணி கூட தகராறுன்னா சமாதானம் செய்ய இப்பாடலில் வரும் "பழைய கனவு உனக்கு எதற்கு கலையட்டுமே, நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே" என்ற வரிகளைத்தான் பாடிக் காட்டுவேன்.
படம்: அந்த ஒரு நிமிடம், பாடியவர்கள்: அவர்களே தான், பாடல்: "சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே". அதே கமல், அம்பிகாவிற்கு பதில் இதில் ஊர்வசி.
நான் முதன் முதலில் CD to Cassette recording செய்த பாடல்.  பாடல் முழுவதுமே காதல் காட்டாற்று வெள்ளம் போல் விரவிக் கிடக்கும்.  எந்த இடத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத வகையில் எங்கு நோக்கினும் பிரித்து மேய்ந்திருப்பார் ராஜா.  "பழைய கனவு உனக்கு எதற்கு" என்று பாடும் முன் SPB ஒரு சிரிப்பு சிரிப்பாரே..!! ரணகளம்..!!

எழுத எழுத இன்னும் பல பாடல்கள் வந்து கொண்டே இருக்கிறன்றன.  "முத்தாடுதே முத்தாடுதே ராகம்", "இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது", "காதல் ராகமும் கன்னித்தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ", போன்ற பல பாடல்கள் இவ்வரிசையில் உள்ளன.  "பனிவிழும் மலர்வனம்", "பொன்மானைத் தேடுதே", "மீன்கொடி தேரில்", போன்ற fast melody solo பாடல்களையும் பிறிதொரு சமயம் பிரித்து மேயலாம். மேலோட்டமாகப் பார்த்தால் எதையோ எழுதப் போய் கடைசியில் கமல் படப் பாடல்களை பற்றி எழுதியது போன்ற ஒரு உணர்வு. அதையும் தனியாக வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுவோம்.  அடுத்த பாகத்தில் சந்திப்போம்...
 
அன்புடன்
மலர்வண்ணன்


 

Tuesday 4 June 2013

சந்தானம் என்றொரு சமூக விரோதி...


முதல் வகுப்பில் "அ ஆ" சொல்லிக் கொடுத்த நவமணி டீச்சரிலிருந்து இன்று "あい"* சொல்லித் தந்துக் கொண்டிருக்கும் பாலா せんせい** வரை பல நல்லாசிரியர்களை கடந்து வந்திருக்கிறேன்.  பிறிதொரு சமயம் அவர்களைப் பற்றி விரிவாகக் காண்போம்.

உங்களை ஒருவன் தினமும் தொடர்ந்து மூன்று வருடங்களாக துன்புறுத்துகிறான்; அவனை உங்களால் கடைசி வரை ஒன்றுமே செய்ய முடியவில்லை; இந்த லட்சணத்தில் உங்கள் பெற்றோரும் அவன் செய்வதே சரி என்றால் உங்களுக்கு எப்படியிருக்கும்?!  ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை சேலம், செயின்ட் பால் பள்ளியில் எனக்கு கிளாஸ் டீச்சராக வந்து வாய்த்த சந்தானம் என்றொரு அரக்கனிடம் நான் பட்ட மன உளைச்சல்கள் இன்று வரை தொடர்கின்றன.

CSI ஹோபார்ட்டில் மூன்றாம் வகுப்பு வரை, நாலும் ஐந்தும் செயின்ட் பால் எலிமெண்டரி பள்ளியில் co education-ல் சந்தோஷமாகக் கடந்து வந்தேன்.  ஹைஸ்கூலில் எங்கப்பாவும், அவரு நண்பர் ஒருவரின் மகனான முட்டைக்கண் செந்திலையும் சந்தானத்தின் வகுப்பில் தான் போடவேண்டும் என்று அடம் பிடித்து சேர்த்து விட்டனர்.  அஸ்தம்பட்டி, சின்னத்திருப்பதி, மனக்காடு, ஜான்சன் பேட்டை பகுதிகளில் அப்போது இந்த சந்தானம் வாத்தியார் கண்டிப்பிற்கு ரொம்ப பிரபலம்.  சந்தானத்திடம் சேர்த்து விடும் அளவிற்கு அப்போது நான் வொர்த்தும் கிடையாது ரவுடியும் கிடையாது.

சந்தானம் பற்றி ஒரு சிறு குறிப்பு:
எட்டாவது படித்து வாத்தியாரனவன்.  6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு சென்று வருவான். வகுப்பாசிரியராய் இருக்கும் வகுப்பிற்கு ஆங்கிலப் பாடம் எடுப்பான்.  ஆங்கிலத்திற்கு "popular நோட்ஸ்" என்ற உரையைப் பார்த்து கேள்வி பதில், meanings, கட்டுரை போன்றவற்றை  போர்டில் எழுதிப் போட்டு விடுவான்.  இரண்டாம் தாளில் வரும் லெட்டெர் writing, grammar போன்றவற்றை கேள்வித்தாள் தயாரிக்கும் ஆசிரியரிடம் வாங்கி அதையும் எழுதிப் போட்டு விடுவான்.  வேறு வகுப்புகளுக்கு சென்று பிற subject பாடங்களை எடுக்கும் போதும் இதே பாணி தான். இதெல்லாம் போகட்டும்.., கணக்குப் பாடத்திற்கும் 'வெற்றி உரையை"ப்  பார்த்து தான் போர்டில் எழுதிப் போடுவான்..!!
சரியாக கால் எட்டாதாகையால் bar இல்லாத ladies சைக்கிளில் தான் பள்ளிக்கு வருவான். எப்போதும் வெள்ளை வேட்டி-சட்டை தான்.  ஆள் சீட்டில் உக்காந்திருக்கும் போது தொப்பை ஹான்டில் பாரில் இடிக்கும்.  தீவிரமான தி.மு.க. விசுவாசி.  எங்கள் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக உயர்ந்த பொழுது திறப்பு விழாவிற்கு அன்றைய முதல்வராக இருந்த அறிஞர் அண்ணாவைக் கூட்டி வந்தது இவன் தான். தான் வகுப்பசிரியானாய் இருக்கும் வகுப்பில் உள்ள அனைவரின் பெற்றோரையும் வரவழைத்து நைச்சியாமாய்ப் பேசி அவர் பிள்ளைகளை பிரைவேட் டியூஷனில் சேர்த்துக் கொள்வான்.  இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

80-களில் எங்கள் வகுப்பில் பெரும்பான்மையான மாணவர்கள் நடுத்தர மற்றும் வறுமையான நிலையில் தான் இருந்தார்கள்.  ஹாஸ்டலில் இருந்து படித்த மாணவர்கள் அனைவரும் ராசிபுரம், நாமக்கல், ஆத்தூர், மேட்டூர் போன்ற பகுதிகளில் உள்ள பெரும் நிலக் கிழார்களின் பிள்ளைகளாக இருப்பர்.  போர்டிங் எனப்படும் இலவச விடுதியில் இருந்து பயிலும் மாணவர்களின் நிலைய சொல்லத் தேவையில்லை. போர்டிங் மாணவர்களை சந்தானம் பிரைவேட் டியூஷனுக்கு அனுமதிக்க மாட்டான்.

எட்டாம் வகுப்பு வரை என் அப்பா எனக்கு வீட்டில் பாடங்களை சொல்லித் தந்த படியால் தமிழ் மீடியத்தில் படித்த என்னால் ஆங்கிலத்தையும் பார்த்து படிப்பதில் ஓரளவுக்கு மற்ற மாணவர்களை விட ஒரு படி அதிகம் என்று சொல்லலாம்.  ஆனால் இங்கிலீஷ் மீடியம் படிக்கும் மாணவர்கள் அளவுக்கு இருக்காது.  ஐந்தாம் வகுப்பில் அரையாண்டுத் தேர்வில் முதல் ரேங்க் எடுத்த நான் ஒன்பதாம் வகுப்பு வரை அதை மெயின்டெயின் செய்தேன்.  அதன் பின் சுயமாக சிந்திக்க ஆரம்பித்ததாலும், கால்பந்தில் பைத்தியமானதாலும், லைப்ரரி செல்லும் பழக்கத்தாலும், எனக்குப் பிடித்த இடங்களுக்கு வீட்டில் அனுமதி பெறாமல் செல்ல ஆரம்பித்தாலும் படிப்பு எனக்கு நான்காம் பட்சமானது.

காலையில் முதல் வகுப்பே எங்களுக்கு சந்தானம் தான் வருவான்.  சனியனுக்கு பாடம் நடத்தவே தெரியாது. சம்பத்தப் பட்ட அனைத்தையும் போர்டில் எழுதிப் போட்டு விடுவான். பிறகு தான் ஆரம்பிக்கும் எனக்கு ஏழரை.  பெஞ்சு மேல் ஏறி நின்று என்னை உரக்கப் படிக்கச் சொல்வான்.  மற்றவர்கள், எழுதியதை நோட்டில் விரல் வைத்து தொடர வேண்டும்.  கேள்வி பதில் சமயத்தில் என்னோடு முட்டைக் கண் செந்திலும் மாட்டிக் கொள்வான்; ஆனால் அவனுக்கு கேள்வியைப் படிப்பதோடு முடிந்து விடும். களைப்பில் கொஞ்சம் குரலை இறக்கிப் படித்தேன் என்றால், "முண்டம்.. முண்டம்.. நல்லா வாயத் தொறந்து படி" என்பான்.

வகுப்பில் வாரத்திற்கு குறைந்த பட்சம் இரண்டு பிரம்புகளையாவது மாணவர்களை அடித்து உடைத்து விடுவான்.  பல சமயங்களில் அவன் காரணமே இல்லாமல் காட்டுத் தனமாக அடிப்பான்.  உதாரணத்திற்கு சில,
விடுப்பு எடுத்திருந்து லீவ் லெட்டரில் பெற்றோர், ஹெட் மாஸ்டர் கையெழுத்து இருந்தாலும் அடிப்பான்.
காசில்லாம நோட்டு வாங்க முடியலன்னு சொன்னாலும் அடிப்பான்.
நோட்டு அவன் சொன்ன கடையில (பொன்னி சூப்பர் மார்க்கெட்) வாங்கலன்னா அடிப்பான்.
ரேங்க் கார்ட் வீட்டுல கையெழுத்து வாங்கி மறுநாளே கொடுக்கலன்னா அடிப்பான்.
Fine போட்டு, கட்ட காசில்லாத பசங்கள அடிப்பான்.
ரெண்டு பசங்களுக்குள்ள சண்டைன்னா, விசாரிக்காம ரெண்டு பேரையும் காட்டடி அடிப்பான்.
டியூஷன் பீஸ் குடுக்கலன்னா அடிப்பான்.
பாடத்துல டவுட் கேட்டா அடிப்பான்.
புரியலன்னு சொன்னாலும் அடிப்பான்.
இதுக்கே இப்படின்னா, இன்னும் வீட்டுப் பாடம் செய்யலன்னா, லேட்டா வந்தா, குறும்பு பண்ணா, நோட் புக் கொண்டு வரலன்னா, ஒழுங்காப் படிக்கலன்னா என்னா அடி அடிப்பான் பாத்துக்கோங்க..

இது போகட்டும், எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட கொடுமைகளை விவரித்து அடங்காது. சந்தானம் தன் வீட்டின் அக்கம் பக்கத்து பிள்ளைகளுக்கும் காலையிலும் மாலையிலும் டியூஷன் எடுப்பான்.  ஆங்கிலம் படிக்கத் தெரிந்த ஒரே காரணத்திற்காக என்னை காலை 6 மணிக்கு அவன் வீட்டிற்கு வரச் சொல்லி விடுவான். என் வீட்டிலிருந்து சரியாக 1km நடந்து செல்வேன்.  8 மணிவரை படிக்க வேண்டும். முடித்தவுடன் திரும்ப வீட்டிற்கு சென்று கிளம்பி பள்ளிக்கு 9:15க்கு முன் 3km நடந்து செல்வேன்.  பள்ளியில் முதல் வகுப்பே இவனுடையது தான் என்பதால் திரும்பவும் அதையே பெஞ்சு மேல் ஏறி நின்று படிப்பேன்.  மாலை 4:15மணியிலிருந்து 5:30மணிவரை பள்ளியில் டியூஷன் என்பதால் எனக்கு மீண்டும் அதே வேலை.  திரும்பவும் 6:30இலிருந்து இரவு 8:30 வரை அவன் வீட்டில் பழியாகக் கிடப்பேன்.  இரவு மட்டும் என் அப்பா என்னை சைக்கிளில் வந்து அழைத்துச் செல்வார்.

மாலை 6:00மணிக்கு அவன் மட்டும் சைக்கிளில் கிளம்பி வீட்டிற்கு சீக்கிரம் சென்று விடுவான்.  நான் நடந்தே என் வீட்டிற்கு சென்று முகம் கழுவி, உடை மாற்றி 6:30க்குள் அவன் வீட்டிற்கு செல்ல வேண்டும்.  5 நிமிடம் லேட்டானாலும் அடிப்பான்.  அதுவும் வீட்டில் எடுக்கும் டியூஷனில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள். எனக்கு அடிவாங்கும் போது கொலைவெறியாக இருக்கும்.  பல நாட்கள் இந்த தூரத்தை ஓடியே கடந்திருக்கிறேன். ஒவ்வொரு நிமிடமும் ஓட ஓட திக் திக் என்று இருக்கும்.  ஓரிரு நாளல்ல; மூன்று வருடங்கள் இதைத் தொடர்ந்து செய்தேன்.

வீட்டில் சந்தானம் கணக்கு பாடம் எடுப்பது வரலாற்றில் இதுவரை எந்த வாத்தியாரும் செய்யாதது.  ராஜலக்ஷ்மி என்ற பெண் சாரதா வித்யாலயாவில் படிப்பவள். கணக்கு புத்தகத்தில் உள்ள அனைத்து கணக்குகளையும் அவள் நோட்டில் சரியான விடையுடன் அழகாக போட்டு வைத்திருப்பாள்.  அவள் நோட்டைப் பார்த்து அனைவரும் காப்பி அடிக்க வேண்டும்.  நோட்டு தீரத் தீர மீண்டும் மீண்டும் காப்பி அடிக்க வேண்டும். ஆங்கிலமும் அதே போல் தான்;  தீரத் தீர எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.  இது பத்தாதென்று சனி ஞாயிறு விடுமுறையில் நீள பேப்பர் வாங்கி அதில் எழுதிக் கொண்டு செல்ல வேண்டும்.  இதுதான் அவன் வெற்றியின் ரகசியம்.

எழுதி முடித்த நோட்டுக்களையும், பேப்பர்களையும் வாங்கிக் கொண்டு திரும்ப தரவே மாட்டான்.  பசங்க சொல்வாங்க, அவன் எல்லாத்தையும் எடைக்குப் போட்டு போண்டா வாங்கித் தின்கிறான் என்று.   ஒரு நாள் அஸ்தம்பட்டி போலிஸ் குடையின் முக்கிலுள்ள சேலம் ரெஸ்டாரென்ட் என்ற ஹோட்டலில் வடை வாங்கி சாப்பிடும் போது என், உடன் படிக்கும் வகுப்பு மாணவன் ஒருவனின் பேப்பரில் வைத்துத் தந்தார்கள்.  பிறகு மேற்கொண்ட விசாரணையில் அவனுக்கு தினமும் காலை, மாலை செய்தித்தாளும், டீயும், வடை-போண்டாவும் ரெகுலராக அந்தக் கடையிலிருந்து இலவசமாகப் போய் விடுமாம். கடையும் சந்தானத்தின் வீடும் அருகருகே தான் இருக்கும்.

ஏழாம் வகுப்பில் என்னை லீடராகவும், அன்புச் செழியன் என்பவனை துணை லீடராகவும் நியமித்தான்.  ஒரு நாள் PT வகுப்பில் அனைவரும் மைதானத்திற்கு சென்றோம். எங்கள் PT வாத்தியார் அன்று வராத படியால் அனைவரும் சென்று விளையாடுங்கள் என்று சொல்லிவிட்டு நானும் விளையாடிக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் பக்கத்து வகுப்பில் இருந்து ரெண்டு பசங்கள் வந்து "அய்யா உன்னையும் அன்புச் செழியனையும் வரச் சொன்னார்" என்று சொன்னான்.  சென்றோம். அந்த வகுப்பில் வழக்கம் போல் சந்தானம் கணக்கு நோட்சை போர்டில் காப்பி அடித்து எழுதிக் கொண்டிருந்தான்.  நாங்கள் உள்ளே நுழைந்தவுடன் எந்தக் கேள்வியும் கேட்காமல் கண்மண் தெரியாமல் ஒரு பச்சை பிரம்பால் வெளுக்க ஆரம்பித்தான்.  கதறக் கதற அடி வாங்கி முடித்த பின்னர் தான் தெரியும் PT வாத்தியார் வரலன்னா விளையாடாம வகுப்பில உக்காந்து படிக்கணுமாம்.  இது அவன் வகுப்பிற்கு மட்டும் அவன் போட்ட ரூல்.  அன்றே என் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன்.

எட்டாம் வகுப்பில் ஒருநாள், என்  நாக்கின் அடியில் ஏதோ அலர்ஜி காரணமாக சில கொப்புளங்கள் வந்து விட்டிருந்தன.  பேச முடியாமல், உணவை மென்று முழுங்க முடியாமல் சிரமப் பட்டுக் கொண்டிருந்தேன்.  என்னை பெஞ்சு மேல் ஏறி ஏதோ ஒரு இழவைப் படிக்கச் சொன்னான்.  பயத்தில் வலியைப் பொறுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.  சத்தமாகப் படிக்க இயலவில்லை.  என்னை "சத்தமாகப் படி" என்றான். என்னால் முடியவில்லை.  "வாயில என்ன சாணியா இருக்கு, சத்தமா படிறா முண்டம்" என்றான்.  என் நாக்கில் இருந்து ரத்தம் கசிவதை சுவையால் உணர்ந்தேன்.  "வாயில் புண் உள்ளது, என்னால் படிக்க முடியாது" என அவனிடம் செய்கையால் சொல்லிக் காட்டி நடப்பது நடக்கட்டும் என அமர்ந்து விட்டேன்.  என்னை அடிக்க ஆவேசத்துடன் ஓடி வந்தான்.  டேபிள் மேல் தலையை கையால் முட்டுக் கொடுத்து குனிந்து கொண்டேன்.  என் முதுகில் எத்தனை அடி விழுந்திருக்கும் என்று சொல்லவே முடியாது.  மனசுக்குள் "உன் சாவு என் கையில தான்டா" எனக் கருவினேன்.  நடுவில் நண்பன் பூபதி "அய்யா அவனுக்கு வாயில புண் இருக்கு, பேச முடியாது" என்று சொல்லி முடிக்கும் முன் அவனுக்கு நான்கைந்து அடி விழுந்தது.  அடித்து ஓய்ந்து போன அவன் "வாயைத் திறந்து காமிடா" என்றான்.  காட்டினேன்.  "இத மொதல்லயே சொல்ல வேண்டியது தானே, அறிவு கெட்ட முண்டம்" என்றான்.

அன்று பள்ளி அரைநேரம் மட்டுமே இருந்தது.  எதிர்பாராத விதமாக என் அப்பா அன்று வந்து விட்டிருந்தார்.  அவரிடம் சந்தானம் ஏதோ பேசினான்.  அப்பா என்னை கூப்பிட்டார்.  நான் நண்பர்களுடன் விளையாடி விட்டு நடந்து வருகிறேன் என்று கூறினேன்.  இல்லை வந்துதான் ஆக வேண்டும் என சைக்கிளில் ஏற்றிக் கொண்டார்.  போகும் வழியில் ஏதேதோ பேசிக் கொண்டே வந்தார்.  நான் இருந்த நிலைமைக்கு  அது வெறும் உளறல்களாகவே தோன்றியது. என்னால் பதில் பேச முடியாத நிலைமை.  ம்... என்று சொன்னால் கூட வாய் வலித்தது.  ஒரே கேள்வியை இரண்டு மூன்று முறை கேட்டார்.  நான் பதில் சொல்லவில்லை.  "இவ்வளோ தூரம் கேட்கிறேன், என்ன அழுத்தம் இருந்தா பேசாமலே வருவ?!" என்றார்.  ஓடும் சைக்கிளில் இருந்து எகிறி குதித்தேன்.  சைகையாலேயே "வாயை மூடிட்டு போ, இல்ல நடக்கிறதே வேற" என்று எச்சரித்து விட்டு ஆர்ட்ஸ் காலேஜ் கிரவுண்டுக்கு ஓடி விட்டேன்.  அது தான் எங்களுக்கு ஆஸ்தான கால்பந்து திடல்.

எங்கள் வகுப்பில் இளங்கோ என்று ஒரு நண்பன் இருப்பான்.  அண்ணன் தம்பிகள் மூன்று பேர். இவன் நடு ஆள்.  இவர்களின் அப்பா, தட்டில் பால்கோவாவை ஏந்தி பேருந்துகளில் ஏறி இறங்கி விற்றுக் கொண்டிருந்தவர்.  இவர்களுக்கு மட்டும் டியூஷன் பீஸ் கிடையாது. ஏனென்றால் சந்தானத்தின் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்வது இம்மூன்று பேரும் தான்.  தினமும் சந்தானத்திற்கு இளங்கோ தான் மதிய உணவு போய் எடுத்து வருவான். அதாவது மதிய உணவிற்கு மணி அடித்ததும் இளங்கோ சைக்கிளில் சந்தானத்தின் வீட்டிற்க்குச் சென்று உணவை வாங்கிக் கொண்டு வந்து இவனிடம் கொடுத்து சாப்பிடும் வரை இருந்து பாத்திரம் கழுவி வைத்து விட்டு தான் சாப்பிடச் செல்வான்.  சில நாட்கள் எங்களிடம் ரகசியமாக, "டேய் இன்று அக்கா ரெண்டு முட்டை வெச்சாங்க, நான் ஒன்ன எடுத்து வழியிலியே சாப்பிட்டேன்" என்பான்.  எங்களுக்கு அல்ப சந்தோஷமாக இருக்கும். இன்று இளங்கோ கடைகளுக்கு தண்டல் விடும் ஒரு பைனான்சியர்.

ஒரு வழியாக ஒன்பதாம் வகுப்பிற்கு வந்து சேர்ந்தேன்.  சேர்ந்த ஒரு மாதத்திற்குள் ஒரு நிகழ்வு. மஞ்சள் காமாலையால் பாதிக்கப் பட்ட ஆறாம் வகுப்பு மாணவன், ஒரு வாரத்திற்குப் பிறகு பள்ளிக்கு வந்திருக்கிறான்.  வழக்கம் போல் சந்தானம் அவனை கேள்வி ஏதும் கேட்காமல் வெளுத்து வாங்கியிருக்கிறான்.  நோய் முற்றிலும் குணமாகாத அம்மாணவன் மயங்கி விழுந்திருக்கிறான்.  மயங்கி விழுந்தவனை ஆட்டோவில் ஏற்றி வீட்டில் விட்டிருக்கிறார்கள். அன்று இரவு அச் சிறுவன் உயிரை விட்டான்.  அவனின் அப்பா அம்மா கூலித் தொழிலாளிகள். இன்று போல் அன்று மீடியாக்கள் கிடையாது.  கொலைகாரன் தப்பித்து விட்டான்.  நான் +1 படிக்கையில் அந்த மிருகம் வேலையிலிருந்து ஓய்வு பெற்றது. அவனுக்கு அன்று பள்ளியில் பெரும் பிரிவுபச்சார விழா எடுத்தார்கள்.  பார்க்கப் பிடிக்காமல் கட் அடித்து விட்டு சினிமாவிற்கு சென்று விட்டேன்.

சந்தானம் ஒரு பின் குறிப்பு:
சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது சேலத்து நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்ட விஷயம், வாத்தியார்கள் எல்லாம் சேர்ந்து குற்றாலமோ, கொடைக்கானலோ சுற்றுலா சென்றிருக்கிறார்கள்.  சென்ற இடத்தில் பாறையில் மோதி சந்தானத்திற்கு காலில் அடி பட்டிருக்கிறது.  அது குணமாகாமல் முற்றிப் போய் முட்டி வரை ஒரு காலை எடுத்து விட்டார்களாம்.  இருந்த ஒரே மகனும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டானாம்.  கம்பீரமாக வரும் வழியெல்லாம் "வணக்கம்" வாங்கி வந்தவன், பின்னாளில்  நடக்கக் கூட முடியாமல் வீட்டிற்குள்ளே சாகும் வரை முடங்கிக் கிடந்திருக்கிறான்.

என் குறிப்பு:
இதே செயின்ட் பால் பள்ளியில் தான் ஜான் அருள் சார், அருள் பெனடிக்ட் சார், கேன்யுட் ரோட்ரிக்யூட் சார், சுவாட்ஸ் சார், ஜார்ஜ் சார், பாதர் கப்ரியல் என என்னைக் கவர்ந்த ஒரு பெரிய நட்சத்திர நல்லாசிரியப் பட்டாளமே உள்ளது.  அனைவரும் என்னை மன்னிப்பார்களாக...!!

அன்புடன்
மலர்வண்ணன் 

* あい - ஜப்பானிய எழுத்தில் அ, இ
** せんせい -  சென்சேய் என்றால் ஜப்பானிய மொழியில் ஆசிரியர்