Friday 23 August 2013

கற்பும் கர்ப்பமும்

காதல், காமம், கன்றாவி, கற்பு, கர்மம் எல்லாமே கலவி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட செயலேயன்றி காதலிக்கும் போது காமம் கூடாது, திருமணம் செய்த பிறகும் காதலிக்கலாம் என்று கேனத்தனமான கொள்கை உடையவர்கள் இதைப் படிப்பதை தவிர்த்து வேறு ஏதாவது உருப்படியான வேலை இருந்தால் பார்க்கலாம்...

தமிழ் சினிமாவின் சமகால இயக்குனர்களில் செல்வராகவன், பாலா, மிஷ்கின், அமீர், பிரபுசாலமன் போன்றவர்களை ஒரு வகையாகவும், வசந்தபாலன், பாலாஜிசக்திவேல், சுசீந்திரன், சசி போன்றவர்களை ஒரு வகையாகவும் பிரித்துக் கொள்ளலாம்.  முதல்வகை இயக்குனர்கள் எதற்காகவும் தங்கள் படைப்பில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத, தாங்கள் நினைப்பது மட்டும் தான் திரையில் வரவேண்டும் என்ற பிடிப்போடு இருப்பவர்கள்.  இரண்டாம் வகையில் இருப்பவர்கள் எப்படியாவது இந்த சமூகத்திற்கு மெசேஜ்(!) கொடுத்தாக வேண்டும், அதே சமயம் படமும் அனைத்து சென்டர்களிலும் ஹிட்டடிக்க வேண்டும் என்ற நோக்கில் படமெடுப்பவர்கள். 

சங்கர், ஹரி, தரணி, etc. என்றொரு பெரிய லிஸ்ட் இயக்குனர்கள் லாஜிக்கையெல்லாம் தூக்கி குப்பையில் கடாசிவிட்டு "ஹிட்" ஒன்றே
குறி என, வெறியுடன் ஒரே பார்முலாவை வைத்து அரைத்த மாவை அரைத்து காலந் தள்ளிக் கொண்டிருக்கின்றன.  பாலாஜி தரனீதரன் (ந.கொ.ப.கா), தியாகராஜன் குமாரராஜா (ஆரண்ய காண்டம்), கமலக்கண்ணன் (மதுபானக் கடை), பா.ரஞ்சித் (அட்டகத்தி) என ஒரு பட்டாளம் திடீரென உள்ளே புகுந்து ஆனந்த அதிர்ச்சியையும் அவ்வப்போது வழங்குவதுண்டு.

விடலைப் பருவ காதலை பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லையைத் தொடர்ந்து பல இயக்குனர்கள் நோண்டி நுங்கு எடுத்து இன்னும் சப்பி போட்ட மாங்கொட்டையில் சதையைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.  பூணூல்-சிலுவையைக் கழட்டி வீசிய க்ளைமேக்ஸைத் தொடர்ந்து "ஆற்றைக் கடந்து ஓடிப் போய் காதலில் வெற்றியடைவது",  "ஸ்லோ மோஷனில் ஓடி ரயிலைப் பிடித்தவுடன் பச்சைக் கொடியைக் காட்டி சுபம் போடுவது", "ரெண்டுபேரும் செத்துப் போவது", "ஒருத்தர் செத்து ஒருத்தர் லூசாவது (இதில் லூசாவது பெரும்பாலும் ஆண்களே)", "பொது எதிரியைக் கொலை செய்து ஜெயிலுக்குப் போவது" என பல வரலாற்று முடிவுகள் கொண்ட பாதையை தமிழ் சினிமா கடந்து வந்திருக்கிறது.  ஆனால் நிஜத்தில் நடக்கும் சில நிகழ்வுகளோ, "பெண் முகத்தில் ஆசிட் அடிப்பது", "பெற்றோர் தூக்கு மாட்டிக் கொள்வது", காலனியைக் கொளுத்துவது", "போலிஸ் ஸ்டேஷனில் கட்டப் பஞ்சாயத்து செய்து கொள்வது", "தற்கொலை அல்லது கொலை செய்யப் பட்டவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது" போன்றவை.
சென்னை நகரத்தில் தங்களைத் தானே மாடர்ன்கள் என நினைத்துக் கொண்டு பல அரை வேக்காடுகள் செய்யும் இன்ஸ்டன்ட் காமத்தையும், ரூம் போட்டு மேட்டர் செய்வதில் இருக்கும் ஆர்வத்தில் பாதுகாப்பை மறந்ததையும், அதனால் ஏற்படும் பக்க விளைவுகளையும் ஒரு படைப்பாக்கி மிடில் கிளாஸ் ஆடியன்ஸை நோக்கி குறி வைத்து எறிந்து அதில் வெற்றியும் பெற்று விட்டார் "ஆதலால் காதல் செய்வீர்" சுசீந்திரன்.  1989-ல் புதியபாதையில் "நிரோத் உபயோகம்" பற்றி அனைவருக்கும் மண்டையில் உறைக்கும் வகையில் படு லோக்கலாக பார்த்திபன் சொன்னதை ஒரு ஓரத்தில் ஜாம் தடவி சுசீந்திரன் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

படத்தின் முற்பாதியில் வரும் கல்லூரிக் காதல், பெண்-பெற்றோர் உறவு, பையன்-பெற்றோர் உறவு, நட்பு என்று எதிலும் எந்தப் புதுமையும் இல்லை.  பிற்பாதியில் கல்லூரிக்குச் செல்லும் பெண் கர்ப்பமானதைத் தொடர்ந்து இரு குடும்பங்களிலும் ஏற்படும் குழப்பங்களை பார்வையாளர்களுக்குத் தெளிவாக காட்டி பரபரப்பை ஏற்படுத்திய  விதம் ஓகே.  பெண்ணின் பெற்றோர்களாக துளசியும் ஜெயப்பிரகாஷும் வாழ்ந்து காட்டியுள்ளனர்.

படம் முடிவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்பு ஹீரோ/ஹீரோயின் என்ட்ரி... பஞ்ச் டயலாகாக ஒரு அலறல்... "அட" போட வைத்தது.

காதல்-காமம் ரெண்டுமே "மேட்டரு"க்கான மீட்டர் தான் என்பதை குழப்பமில்லாமல் சொல்லி; கல்லூரி மாணவர்கள், குறிப்பாக பெண்கள்- உடலுறவு, பாதுகாப்பு, கர்ப்பம், கருத்தடை, பாலியல் நோய்கள், கருக்கலைப்பு, ஆணுறை, லூப், Morning-After Pill போன்ற விபரங்களை தெளிவாக அறிந்திருக்க வேண்டும் என்பதை முன் வைத்து இப்படம் வந்திருந்தால் பாராட்டியிருக்கலாம்.  அதை விடுத்து கர்ப்பமான பெண்ணின் பெற்றோர் அழுது புலம்புவதும், பஞ்சாயத்து பேசுபவர்கள் பெண்ணைப் பற்றி மட்டும் கேவலமாகப் பேசுவதும் (பெண்ணின் அம்மா கூட பையனின் அக்காவை கேவலமாகப் பேசுகிறார்), திருமணம் ஆகாத ஒரு பெண்ணின் கருக்கலைப்பு என்பதை போதைப் பொருள் கடத்தல் ரேஞ்சை விட ஓவராகக் காட்டியதும், எப்படியாவது அந்தப் பெண் தன் கருவை கலைத்து விட மாட்டாளா.. என்ற எண்ணத்தை பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்த மேற்கொண்ட பிரயத்தனங்களும் சலிப்படைய வைக்கின்றன.

பலரும் இப்படத்தை பெற்றோர் தமது பதின்வயது குழந்தைகளுடன் சென்று கட்டாயம் பார்க்க வேண்டும் என பரிந்துரை செய்கின்றனர்.  தாரளமாக சென்று பார்க்கலாம்.  பாலியல் குறித்த நல்ல புரிதல் உள்ள இளைஞர்க்கு இப் படம் பெரும் மொக்கையாகவே தோன்றும்.  இறுதிக் காட்சியில் பெண்ணுக்கு வேறொரு பையனுடன் நிச்சயதார்த்தம் நடப்பது போல காட்டி கற்பை(!) விட கர்ப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்காவது தமிழ் சினிமா வளர்ந்துள்ளதே என்பது ஆறுதல்..!!

7G-ரெயின்போ காலனியில் அனிதா கதிரிடம் ஹோட்டல் ரூமில், "i feel like doing it" என்று சொல்வாளே, அதுதாண்டா காதல்..!!
 

- அன்புடன்
- மலர்வண்ணன்

Monday 19 August 2013

பிக்கப் பண்ணியாச்சா..?!

பணியாற்றிய Rent A Car நிறுவனத்தில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு:

வழக்கம் போல், டிரைவர் காரை எடுத்துக் கொண்டு ஒரு ஏர்போர்ட் பிக்அப்-க்குச் சென்றார்.  அழைத்து வரப்பட வேண்டியவர் ஒரு நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்பதால் நன்கு அனுபவமுள்ள, சென்னை சாலைகளுக்கு வெகுவாகப் பழக்கப் பட்ட டிரைவரை அனுப்பியிருந்தார்கள்.

டிரைவரும் முன்னதாகவேச் சென்று டெர்மினலில் ப்ளகார்டுடன் காத்திருக்க ஆரம்பித்தார்.  வரவேண்டிய விமானம் வந்தடைய ஒவ்வொரு பயணியாக வெளியேற ஆரம்பித்தனர்.  கிட்டத்தட்ட பெரும்பான்மையான பயணிகள் வெளியேறிவிட்ட நிலையில் டிரைவருக்கு பயணியே போன் செய்கிறார்.


"நான் XXX கம்பெனியில் இருந்து AAA பேசுறேன்... எங்க இருக்க?"
"சார், நான் டெர்மினலில் பயணிகள் வெளிவரும் வாசலில் கரெக்டா நிக்கிறேன் சார்"
"உன் கையில பெயர்ப் பலகை இருக்கா?"
"சார் இருக்கு சார், நான்தான் சார் முன்னாடி நிக்கிறேன்"
"அதைக் கொஞ்சம் ஆட்டிக் காமி!!"
"சார், ஆட்டிட்டு இருக்கேன், தெரியுதா?"
"தெரியலப்பா"
"சார், நல்லா பாருங்க... ஒரு திட்டு மேல ஏறி நின்னு ஆட்டிட்டு இருக்கேன்"
"எனக்குத் தெரியல, நீ அங்கேயே நில்லு, நானே வர்றேன்.."

போன் கட் செய்யப் படுகிறது.  சிறிது நேரம் கழித்து மீண்டும் அழைக்கிறார்.


"நான் வாசலுக்கே வந்துட்டேன், நீ எங்க இருக்க?"

"சார், நானும் வாசல்ல தான் சார் நிக்கிறேன்..."
"ஏய், என்னப்பா சொல்ற? எங்கதான் இருக்க?"
"சார், நீங்க என்ன கலர் சட்டை போட்டிருக்கீங்க?"
"ப்ளு ஷர்ட், ப்ளாக் பேன்ட்; நீ?"
"சார், வெள்ளை சட்டை, டார்க் ப்ளு பேன்ட்!!"
"தெரியலப்பா"
"சார், எனக்கும் தெரியல சார்"
"சரி, நீ வை"
பயணி தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து அட்மினில் இருப்பவர்களை செம தள்ளு தள்ள அவர்கள், எங்கள் நிறுவனத்தின் கஸ்டமர் கேருக்கு அழைத்து தள்ள, அவர்கள் டிரைவரை அழைத்து தள்ள, டிரைவர் தெளிவாக தன் நிலையை விளக்க அது மீண்டும் பயணிக்கு பகிரப் பட்டது.  டிரைவருக்கு அடுத்த போன் வருகிறது.

"XXX கம்பெனில இருந்து பேசுறோம், எங்க GM ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கார். exact -ஆ எங்க இருக்கீங்க?"
"மேடம், நான் கரெக்டா arrival-ல நிக்க வேண்டிய இடத்துல நிக்கிறேன்.  கையில ப்ளகார்டை ரொம்ப நேரமா தூக்கிப் பிடிச்சிட்டு நின்னுட்டிருக்கேன்."
"அதுல மிஸ்டர் AAA பெயர் தானே போட்டிருக்கு?"
"ஆமா மேடம்"
"அதுல XXX கம்பெனி பெயர் தானே போட்டிருக்கு?"
"ஆமா மேடம்"
"சரி, அங்கேயே நில்லுங்க.. எங்கேயும் போயிடாதீங்க, மறுபடி கூப்பிடுறேன்"

டிரைவருக்கு மீண்டும் AAA அழைக்கிறார்.


"ஏய், எங்கதாம்ப்பா இருக்க?"
"சார், அங்கேயே தான் சார் இருக்கேன், ரெண்டு ப்ளு கலர் சட்டை போட்டவங்கக்கிட்ட கூட போய் விசாரிச்சுட்டு வந்துட்டேன் சார்"
"ஷிட் சர்விஸ் யா"
"என்ன சார்?"
"ஐ ஹவ் நெவர் எச்பெக்டட் திஸ்"
"எங்க சார் இருக்கீங்க..!!"
"ஹெல் மேன்.."
"சார், நான் வேணும்னா பார்க்கிங்ல வெயிட் பண்ணட்டுமா? வண்டி நம்பர் YYYY  YYYY க்கு வந்துடுறீங்களா?"
"புல் ஷிட்... ஐ ஹவ் ஹெவி லக்கேஜ் வித் மீ..."
"சார், எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க, என் போன் வேற பேட்டரி கம்மியா இருக்கு..!!"
"கிரேஸி பெக்கர்..."
"என்ன சார்?"
"ஹேய்... நீ இருக்கிறது டொமெஸ்டிக்கா, இன்டர்நேஷனலா?"
"சார், டொமெஸ்டிக் சார்"
"ஷிட்... நானும் டொமெஸ்டிக்ல தான் இருக்கேன்.., நீ ஒன்னு பண்ணு, அங்க ஒரு காபி டே இருக்கு தெரியுதா?"
"ஆமா சார்"
"அங்க வந்துரு; உடனே.."

இதற்குள் கஸ்டமர் கேரில் இருந்தது டிரைவருக்கு மீண்டும் "பிக்கப் பண்ணியாச்சா?" என்று அழைப்பு வர, "அவரை காபி டே-ல போய் பிக்கப் பண்ணிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு டிரைவர் அங்கு சென்றார்.  சில நிமிடங்களில் AAA வின் அழைப்பு...

"காபி டே வந்துட்டியா?"

"வந்துட்டேன் சார்"
"எங்க இருக்க?"
"வாசல்லயே இருக்கேன் சார்"
"ஷிட்... பொய் சொல்லாத, நானும் அங்க தான் இருக்கேன்.  நீ வேற எங்கேயோ மயிரப் புடுங்கிட்டு இருக்க"

"சார், அந்த மாதிரிப் பேசாதீங்க... நான் நீங்க சொன்ன இடத்துல தான் நிக்கிறேன்"
"இல்ல, நீ வேற எங்கேயோ *****ட்டு இருக்க"
"சார், அவ்வளவு தான் மரியாதை"
"என்ன பண்ணுவ, உன் மேல இன்னைக்கே கம்ப்ளைன்ட் பண்ணி என்ன செய்யுறேன் பாரு?"
"உங்களால என்னை ஒன்னும் செய்ய முடியாது"
"சரி, காபி டே-ல தானே நிக்கிற?"
"ஆமா"
"உன் பக்கத்துல ZZZ பேங்க் ATM இருக்கா?"

"இல்ல, VVV பேங்க் ATM தான் இருக்கு?
"டாம்ன்..., நீ முன்னபின்ன ஏர்போர்ட் போயிருக்கியா? ****கர்?
"நீ முன்ன பின்ன ப்ளைட்ல போயிருக்கியா?"
"சரி, நீ போய் பார்க்கிங்-ல இரு, நான் வந்துத் தொலையுறேன்.. அட்லீஸ்ட் சிட்டிக்கு உள்ளயாவது உனக்கு வழி தெரியுமா?"
"எங்க போகணும்?"
"எலெக்ட்ரானிக் சிட்டி"
"அது, பெங்களூராச்சே..!!"
"நீ எங்க இருக்க?"
"சென்னை....!!!"
 

- அன்புடன்
- மலர்வண்ணன்

Friday 16 August 2013

மூன்று பேர்; இரண்டு காதல்

இந்த வாரத்தில் ஒருநாள் அலுவல் குறித்து காரைக்கால் செல்ல வேண்டியிருந்த படியால் சென்னையிலிருந்து அதிகாலையில் கிளம்பி பஸ்ஸில் பாண்டிக்குச் சென்று அங்கிருந்து காரில் காரைக்கால் சென்று வேலையை முடித்து மாலை பாண்டி பஸ் நிலையத்தில் வந்து இறங்கி சென்னை செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்த பொழுது மணி 6.  இது இந்த பதிவுக்கு தேவையில்லாத விபரம்... நிற்க வேண்டாம்... மேலே...

பஸ்ஸில் அப்போதைக்கு என்னுடன் சேர்த்து ஏழெட்டு பேர் தான் இருந்தனர்.  ECR வழி என நினைத்து வலதுபுறம் சன்னலோரம் அமர்ந்தேன், ஆனால் வண்டி திண்டிவனம் வழி போனது வேறு கதை.  20 அல்லது அதிகபட்சமாக 21 வயது நிரம்பிய ஒரு பெண்ணும் பையனும் ஏறி எனக்கு இடது புறம் முந்தின சீட்டில் அமர்ந்தனர்.  பெண் பயணிப்பவள், பையன் வழியனுப்ப வந்தவன் என்று பார்த்தவுடன் தெரிந்தது.  இருவரும் நெருக்கமாக அமர்ந்து பேசிக்கொண்டும், சீண்டிக்கொண்டும், மேலோட்டமாக(!!) தழுவிக் கொண்டும், முத்தமிட்டுக் கொண்டும் இருந்தனர்.  உள்ளுக்குள் இவர்களை வேடிக்கை பார்ப்பது சரியல்ல என்று பட்டாலும், மிக அருகில் நடக்கும் நிகழ்வாகையாலும், குறுக்கில் வேறு யாரும் இல்லாததாலும் நிழல் போன்ற அசைவுகள் மூலம் அவர்களின் இயக்கங்கள் மூளைக்குள் படம் போட்டு காட்டின.
 

வெயில் தடுப்பு காகிதம் ஒட்டப்பட்டு உள்ளே நடப்பது ஏதும் வெளியே தெரிய வாய்ப்பில்லாமலிருந்தது.  கொஞ்சம் கொஞ்சமாக இருக்கைகள் நிறைய ஆரம்பித்தன.  கைக் குழந்தையுடன் வந்த தம்பதிகள் நேரே என்னிடம் வந்து "சார் கொஞ்சம் முன்னாடி மாறி உக்காந்துக்குறீங்களா?"-ன்னு கேட்டனர்.  பஸ்ஸில் இன்னும் சில பேர் ஒற்றையாக உக்காந்திருக்க கரெக்டா ஆளைக் கண்டுபிடிச்சு எப்படித்தான் வந்து கேக்குறாங்களோ?  அவங்க நம்மளத்தான் அப்ரோச் பண்ண வர்றாங்கன்றத தெரிஞ்சு டெரர்றா இருக்கணும்னு முயற்சி பண்ணாலும்  நம்ம மூஞ்சி இன்னும் பிஞ்சாவே மத்தவங்களுக்குத் தெரியும் போல!!  எந்திருச்சி எடம் கொடுக்கலன்னா குழந்தைய விட்டு அடிக்கச் சொல்லிடுவாங்க போல இருந்த படியால் எழுந்து முன் சீட்டில் சென்று அமர்ந்தேன்.  இப்போ அந்த இளஞ்ஜோடிகள் எனக்கு மிக அருகில்.

கையில் பாட்டில், டம்ளர் சகிதம் இரு நடுவயது நாளைய பாரதங்கள் லேசான தள்ளாட்டத்துடன் ஏறின.  நடத்துனர் "ஏம்பா, இது bar கிடையாது, எறங்கு"ன்னு சொல்ல பிளாஸ்டிக் டம்ளர்களை தூக்கியெறிந்து விட்டு, "குடிக்கல"ன்னு சொல்லிவிட்டு பின் சென்று அமர்ந்தனர்.  நடத்துனர் மீண்டும், "இது ஏசி பஸ், நீங்க குடிச்சிட்டு வந்து ஏறினா, மத்தவங்க எப்படி நாத்தத்தைப் பொறுத்துக்கிட்டு கூட வருவாங்க, இறங்குங்க"ன்னு சொல்ல; அந்த சிங்கங்கள், "எறங்க முடியாது, உன்னால ஆனதை பாத்துக்கோ, எங்களை முடிஞ்சா இறக்கிக் காட்டு" என சித்திரைத் திருவிழாவில் "முடிஞ்சா வழக்குப் போடுங்க"ன்னு சொன்ன தலைவர் மாதிரி சவால் விட்டனர்.  நடத்துனர் சிரித்துக் கொண்டே டிக்கெட் போட ஆரம்பித்தார்.

இப்போது அந்த ஜோடிகளை நன்கு கவனித்தேன்.  பார்ப்பதற்கு இருவருமே நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் போல் இருந்தனர். நல்ல அழகுடன் பொருத்தமாகவே இருந்தனர்.  நாடகக் காதல் போல் தெரியவில்லை; அப்பெண்ணும் ஜீன்சுக்கும், கூலிங்கிளாசுக்கும் மயங்குபவள் போலும் இல்லை.  நாற பரம்பரை, நோண்ட பரம்பரை, நொங்கு பரம்பரை என்று காட்டு விலங்குகளின் படங்களை ப்ளெக்ஸ் பேனரில் அடித்துக் கொண்டு திரியும் கூட்டம் இவர்களைப் பிரிக்காமலிருப்பார்களாக என நினைத்துக் கொண்டேன்.  வண்டி நகர ஆரம்பித்தது... பையன் பிரியாவிடை கொடுத்து இறங்கினான்.  நடத்துனர் இன்னொரு பெண்ணை அங்கு அமர்த்த முயற்சிக்க இவளோ "ஆள் வரும்" என்று சொல்லிவிட்டாள்.

பஸ், நிலையத்தை விட்டு வெளியே வந்து ஒரு திருப்பத்தில் திரும்பி நின்றது.  சீருடையில் இரு காவலர்கள் ஏறி நேரே நமது சிங்கங்களிடம் சென்று இறங்கச் சொன்னனர்.  "டிக்கெட் வாங்கியிருக்கோம்"ன்னு சிங்கங்கள் ரூல்ஸ் பேச, "வாங்க, வேற வண்டியில அனுப்பி வைக்கிறோம்"ன்னு காவலர்கள் கொஞ்சியழைத்தும் எழ மறுத்தனர்.  பிறகென்ன... பொத்.. பொத்தென்று இருவருக்கும் பின்னங்கழுத்தில் சில-பல பட்டாயா, கோட்டக்கல் மசாஜ் செய்து பிடரியைப் பிடித்து இழுத்துச் சென்றனர்.  "சார், அடிக்காதீங்க..சார், அடிக்காதீங்க..சார்!!" என்ற வசனத்தையே இருவரும் திரும்பத் திரும்ப சொல்லியபடி ரிங் மாஸ்டர்கள் உடன் இறங்கினர்.

நடத்துனர், "ஏம்மா இன்னுமா ஆள் வரல" என்று கேட்க அவள், "வருவாங்க.." என்று சொல்லிக் கொண்டே பரபப்புடன் நாட்டுக் கோழி தீனி பொறுக்குவதைப் போல செல்போனை நோண்டிக் கொண்டே எழுந்து நின்று வெளியே கண்களை ஓட விட்டாள்.  அடுத்த திருப்பத்தில் வண்டியை நிறுத்தி இவள் வயதையொத்த வேறொரு பையன் ஏறினான்.  அவனைக் கண்டதும் புன்னகையுடன் இவள் அமர, அவனோ உடனே உட்காராமல் அடுத்த ஏரியாவிற்கு போன தெரு நாயாக பம்மிக் கொண்டே இருபுறமும் நோட்டம் விட்டபடி சிறிது நேரம் கழித்து அவளருகில் அமர்ந்தான்.  சரி, உடன் படிப்பவனாகவோ, உடன் வேலை செய்பவனாகவோ, நண்பனாகவோ, சகோதரனாகவோ இருக்கலாம் என நினைத்தேன்..

பஸ், டோல் பிளாசா தாண்டியதும் உள்ளே இருந்த விளக்குகள் அணைக்கப் பட இயர் போனை எடுத்து காதில் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்க ஆரம்பித்தேன்.  கட்டணக் கழிப்பறையில் ஒட்டியிருக்கும் பிட் நோட்டீசில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் இருப்பது போல்  பக்கத்து சீட் பையன் நெளிந்து கொண்டிருக்க, என்னதான் செய்யுறான் இவன் என்று பார்வையை ஓட்டினேன்.  பையன் # 1 என்னவெல்லாம் செய்து விட்டுச் சென்றானோ அதே வேலைகளை பையன் # 2 தொடர்ந்து செய்து கொண்டிருந்தான்..!! அவளும் தான்..!! "இருட்டு பஸ்ஸில் முரட்டு கிஸ்ஸு"-ன்னு ஒரு தனி பதிவே போடும் அளவிற்கு கமல்ஹாசனுக்கே சவால் விட்டுக் கொண்டிருந்தனர்.


"காதல்ன்றது செடியில ஒரே முறை பூக்குற பூ மாதிரி; மரத்துல காய்க்கிற காய் மாதிரி; தட்டுல நக்குற நாய் மாதிரி; சந்துல நிக்குற பேய் மாதிரி; கமுந்து படுக்கிற பாய் மாதிரி"ன்னு வசனம் எழுதுறவன் எல்லோரையும் நினைக்க, அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது.  பலருடன் காதல் வரலாம்.. தப்பில்லை, அது இயல்பு; பலருடனும் ஒரே நேரத்தில் எப்படி வருகிறது??  அதுவும் 10 நிமிட இடைவெளியில் அடுத்த ஆளா..!!

அவளைக் குறை சொல்வதா? அந்தப் பசங்களைக் குறை சொல்வதா? அச் செல்வங்களைப் பெற்றெடுத்தவர்களை குறை சொல்வதா? சம்பளத்திற்கு மட்டும் வேலை பார்க்கும் பல நவீன வாத்திகளை குறை சொல்வதா? என்னைப் போல் வேடிக்கை பார்த்த சமூகத்தை குறை சொல்வதா?  மீண்டும் கண்களை மூடி இசையை ரசிக்க ஆரம்பித்தேன்...
"ஆதலால்... ஆதலால்... காதல் செய்வீர்..." என யுவன் ஷங்கர் ராஜா உச்சஸ்தாயில் பாடிக் கொண்டிருந்தார்..!!



- அன்புடன்
- மலர்வண்ணன்

Sunday 11 August 2013

எனக்கும் "அது" வந்திடுச்சி...!!

     10.08.2013 அன்று அதிகாலை சுமார் 6 மணிக்கு இரைச்சல் இல்லாத சாலை, இருட்டிக் கொண்டு மேக மூட்டத்துடன் வானம், தென்காசித் தூறல்... சென்னையில் தான் இருக்கிறோமா என்பதை நம்பவே முடியவில்லை.  இரு சக்கர வாகனத்தில் அம்மணியுடன் படகில் போவது போல முகத்தில் சாரல் அடிக்க மெதுவாக சென்று கொண்டிருந்தேன்.  இதுபோன்ற  மிதமான தூறல் முகத்தில் அறைந்த படி செல்வது சென்னையில் மிக அபூர்வம்.  அதைக் கூட அனுபவிக்கத் தோன்றாமல் சில ஜீவராசிகள் குடை, ஜெர்கின் சகிதம் சென்று கொண்டிருந்தன.  சில தேநீர்க் கடைகளிலும், பஸ் நிறுத்தங்களிலும் தஞ்சம் புகுந்திருந்தன.
      விடுமுறை, அதுவும் மழையுடன் கூடிய விடுமுறை.. இழுத்துப் பொத்திட்டு ...ச்சே... போர்த்திட்டு படுக்காம  காலங்காத்தால அம்மணி கூட அப்படியெதுக்கு சவாரி போனேன்னா... நிற்க!! 

     வருடம் 2008.  அப்போது வேலைக்கு சேர்ந்த நிறுவனத்தின் தயவால் உடலை முழு மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டேன்.  அதன் பிறகு அதற்குண்டான தேவை இருக்கவில்லை.  சென்ற மாதம் அம்மணியின் பெரியப்பா கேன்சரால் இறந்ததைத் தொடர்ந்து, அம்மணி இருவரும் வாத்தியார் பரிசோதனை (அதாங்க master check-up) செய்து கொண்டே ஆக வேண்டும் என்ற நச்சரிப்பு.  போதாக் குறைக்கு இறப்பிற்கு வந்த உறவினர்களுள் மருத்துவர் ஒருவர் என்னிடம், "மலர், இந்த வயசுக்கப்புறம் (அப்படியென்ன நமக்கு வயசாயிட்டு..!!)  நீங்க ரெண்டு பேரும் வருடம் ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டே ஆக வேண்டும்.." என்று அம்மணி முன்னாலேயே அறிவுறுத்தினார்.  இது போதாதா?  காகம் கரையும் முன்னர் (சென்னையில் சேவல் இல்லீங்க) எழுப்பி விடப்பட்டு சென்று கொண்டிருந்தோம்.

     டீ குடித்தால் நன்றாயிருக்கும் போலத் தோன்றியது.  வெறும் வயிற்றில் வரவேண்டும் என்று சொல்லியிருந்த படியால் எட்டு ரூபாய் மிச்சமானது.  நந்தம்பாக்கத்தில் உள்ள பழைய, பிரபல மருத்துவமனையை சென்றைடைந்தோம்.  உள்ளே மாணவிகளுக்கான இறைவணக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  இருட்டாக இருந்த வரவேற்பறையில் முதல் ஆளாக சென்று அமர்ந்தோம்.  அடுத்த சில நிமிடங்களில் வயிற்றை இறுக்கிப் பிடித்தபடி ஒரு பெண் அருகில் வந்து அமர அவர் கணவர் ஆட்டோவிற்கு பணம் கொடுத்துவிட்டு பின்னாலே வந்தார்.  அப்பாடா... ஒரு hospital feeling வந்து விட்டது.

    
     Master check-up offer ஒருத்தருக்கு 2000 ரூபாய்.  ஆடி மாசம், ஜோடியா வந்தா ஏதும் discount உண்டா எனக் கேட்கத் தோன்றி அடக்கிக் கொண்டேன்.  ஒரு மாறுதலுக்கு பெயர் கொடுப்பது, பணம் கட்டுவது, ரசீது வாங்குவது, ஒவ்வொரு பரிசோதனைக்கும் எங்கெங்கு செல்வது, யாரைப் பார்ப்பது போன்ற அனைத்து வேலைகளையும் அம்மணியே செய்தார்.  சாதாரண நாட்களில் ஹோட்டலில் உப்பு வேண்டுமென்றால் கூட சர்வரிடம் நான் தான் கேட்டு வாங்கித் தர வேண்டும்.  இரத்தம்-சிறுநீர் எடுத்துக் கொண்டு, மீண்டும் காலை சிற்றுண்டியை முடித்து இரண்டு மணி நேரத்திற்குள் வரச் சொல்லினார்கள்.  தொடர்ந்து X-ray மற்றும் ECG எடுக்கப் பட்டது.  Scan செய்யும் மருத்துவர் 10 மணிக்கு தான் வருவார் என்பதால் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் சென்றோம். 

      மழை இன்னும் விடாமல்
லேசாக தூறிக் கொண்டிருந்தது.  ஆனால் முழுமனதுடன் ரசிக்க முடியவில்லை.  11 மணி வாக்கில் மீண்டும் ஒரு முறை இரத்தம் கொடுத்துவிட்டு Scan-க்குச் சென்றோம்.  CT மற்றும் Echo எடுக்கப் பட்டது.  நுரையீரலும் கல்லீரலும் எந்த கதியில் இருக்கிறதோ என பதட்டத்துடனே இருந்தேன்.  Scan செய்த பெண் டாக்டர்  ரொம்ப தோழமையுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே எடுத்தார்.  முடிவில் "ஒன்றுமில்லை, எல்லாம் நார்மலாக இருக்கிறது.." என்று சொல்லி பதட்டத்தைப் போக்கினார்.  அனைத்தும் இருவரின் உடலும் நல்ல நிலையில் இருக்கிறது என்று சொல்லி விட்டன.  அடுத்து இரத்தம் மற்றும் சிறுநீருக்கான பரிசோதனை முடிவு கொடுக்கும் இடைப்பட்ட நேரத்தில் வங்கிக்குச் சென்று வந்தேன்.


     இந்தப் பரிசோதனை முயற்சிக்கு அம்மணி ஏன் அதிகம் அக்கறை காட்டினார் என்றால்... முதலாவது,  அவர் அம்மா அப்பா இருவருக்கும் சர்க்கரை வியாதி இருப்பதால் தனக்கும் வந்துவிடுமோ என்ற உணர்வு; ரெண்டாவது, கடந்த பல வருடங்களாக மாதம் இரு முறையாவது (கடந்த சில மாதங்களாக சுத்தமாக இல்லை...) பார்ட்டி சென்று கொண்டிருந்த மணாளனின் உள்ளுறுப்புகள் உருப்படியாக இருக்கிறதா, இல்லை இன்சூரன்ஸ் ஏதும் அதிகப் படியாக எடுக்க வேண்டியிருக்குமோ என்ற அக்கறை தான்..!! 

     இடைப்பட்ட நேரத்தில் "உனக்கு சுகர் இருப்பதற்கான வாய்புகள் அதிகம்; இனி ராகியும், கம்பும் மளிகை லிஸ்டில் அரிசிக்குப் பதில் சேர்ந்து விடும்" என்று கலாய்த்துக் கொண்டிருந்தேன்.  முடிவு வந்தது....  அம்மணியின் ரிசல்ட் ஒரு குறையும் இன்றி பக்காவாக இருந்தது.  Scan report கொடுத்திருந்த தெம்பில் அலட்சியமாக என்னுடையதைப் பிரித்துப் பார்த்தோம்.  இரத்தத்தில் சர்க்கரையுடன் கொழுப்பும் ஏகத்துக்கு ஏறிக் கிடந்தது.  கடைசியில எனக்கும் "அது" வந்திடுச்சி...!! அப்போ ராகியும் கம்பும் கட்டாயம் வாங்கித்தான் ஆக வேண்டும் போல என் மனதிற்குள் ஓடியது.
 

     மருத்துவரைச் சென்று பார்த்தோம்.  ஒரு சில எளிய உணவுமுறை மாற்றங்களைப் பற்றி சொன்னார்.  தவிர்க்க வேண்டியவை, சேர்க்க வேண்டியவை, மாற்ற வேண்டிய பழக்க வழக்கங்கள் பற்றி சொன்னார்.  நான் ரொம்ப ஆர்வமாக, "அப்போ மருந்து சாப்பிட தேவையில்லையா" என்று கேட்டேன்.  அவரோ, "நான் சொன்னத follow பண்ணலன்னா தான் தேவைப் படும்"ன்னு சொல்லிட்டார்.  என்னடா இது! மருந்து எழுதிக் கொடுக்காத டாக்டர் ஒரு டாக்டரா? என ஆச்சரியப்படலாம்.  ஏன்னா, அந்த டாக்டர் என்னோட மச்சான்..!!

     இப்போ அம்மணி வீட்டுல என்னை செல்லமா கூப்பிடுற பேரு..."சக்கரை..."!!



- அன்புடன்
- மலர்வண்ணன்